Tuesday, February 03, 2009

520. அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும்

சென்னை: இலங்கைத் தமிழர்கள் அனைத்து நல உரிமைகளையும் பெற தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகம் முழுவதும் பேரணிகள், கூட்டங்கள், மாநாடுகள் நடத்தப்படும் என திமுக செயற்குழுவில் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார்.

இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இன்று திமுக செயற்குழு கூடியது. இக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவர் மருத்துவமனையில் ஓய்வெடுத்து வருகிறார்.

ஓய்வு கட்டாயம் தேவை என டாக்டர்கள் வலியுறுத்தியுள்ள போதிலும், இன்றை கூட்டத்தில் பங்கேற்க அவர் உறுதியாக இருந்தார்.

இதையடுத்து இன்று காலை அண்ணா நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதை முடித்துக் கொண்டு அண்ணா அறிவாலயம் வந்த முதல்வர் அங்கு திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் அமைச்சர்கள் அன்பழகன், மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், தென் மண்டல திமுக அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக தீக்குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு இரங்கல் தெரிவித்து முதலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அடுத்து, இலங்கைத் தமிழர்களுக்கு நல உரிமைகளைப் பெற்றுத் தர ஒத்தக் கருத்துடைய அரசியல் கட்சிகள், சான்றோர்களைத் திரட்டி பட்டி தொட்டியெங்கும் விளக்கக் கூட்டங்கள், பேரணிகள், மாநாடுகளை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முழுமையான சுயாட்சி மற்றும் முழுமையான அதிகாரப்பகிர்வு ஆகியவை கிடைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்திற்குள், அரசியல் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி 7ம் தேதி சென்னையில் பிரசார கூட்டம் மற்றும் பொதுக் கூட்டம் நடைபெறும். பிற மாவட்ட தலைநகரங்களில் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என தீர்மானிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை முதல்வர் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், அண்ணன் எப்போது சாவான், திண்ணை எப்போது காலியாகும் என்று சிலர் நினைக்கிறார்கள். அண்ணனும் சாக மாட்டான். திண்ணையும் காலியாகாது.

திமுகவையும், காங்கிரஸையும் பிரிக்க முயற்சிக்கிறார்கள். அந்த சிலரின் சதி பலிக்காது. அதேபோல பந்த் நடத்தி அரசைக் கலைக்கவும் முயற்சிக்கிறார்கள் என்று முதல்வர் குற்றம் சாட்டினார்.


நன்றி: தட்ஸ்டாமில்.காம்

2 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test ...

said...

முத்துகுமாருக்கு வீர வணக்கம்.
---------------------
அணையப் போவதாய்
எண்ணிக் கொண்டிருந்த
இனநெருப்பை பற்றவைத்த
அக்கினிக்குஞ்சு நீ!

ஆம்!உன் தாய் தமிழச்சி தான்
உயிரை துச்சமென மதிக்கும்
விவேகமிக்க வீரனைப் பெற்றெடுக்க
ஓர் தமிழச்சியால் தானே முடியும்...
நீ தூத்துக்குடிதான்
கலப்படமில்லா முத்து அங்குதானே கிடைக்கும் ...

முராரியால்
பூபாளம் பாடிய
புதிய வரலாறு நீ!

அவர்கள் புலியாய் போரிடுகின்றனர்
நீ ஒளியாய் போரிட்டாய்
நாங்கள் வாய்மொழியாலாவது
போரிட வேண்டாமா?

முத்துக்குமார் தமிழ்க்கடவுள்
என்றனர் நம்பவில்லை...
முத்துக்குமார்தானே தமிழ்க்கடவுளாக
இருக்க முடியும்
இப்போது நம்புகிறேன்...

நீ எழுதி வைத்த மரண ஓலைதான்
இனி எங்கள்
புதிய புறநானூறு!

பல அரசியல் வாதிகள்
பிணங்களாய்ப் போனார்கள்....
நீ எப்போதும் உயிரோடு இருப்பாய்!

தூக்குக்கயிற்றை முத்தமிட்டான் பகத்சிங்
தீயை முத்தமிட்டாய் நீ!
அன்று இந்தியா கிடைத்தது...
நாளை ஈழம் கிடைக்கும்!

வீர வணக்கத்துடன்
Dr.ச.தெட்சிணாமூர்த்தி,
அறந்தாங்கி.

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails